Saturday, March 1, 2008

கவிமடம் வழங்கும் விருதுகள்

நெடுநாட்களாகத் தூங்கிக் கிடக்கும் கவுஜைமடத்தைத் தட்டியெழுப்ப வேண்டிய அவசியம் வந்தேவிட்டது ஒரு வகையாக

தமிழ்மணம் விருதுகளை வழங்கபோவதாக அறிவித்து விட்டு வசதியாக மறந்து போனது. சங்கமம் நினவுக்கு வரும்போதெல்லாம் விருதுகள் பற்றி பதிவுகள் இடுகின்றது. ஆனால் எதையும் பேசாமல் எதையும் சொல்லாமல் கவிமடம் மட்டுமே கவுஜைக்கான சிறப்பு விருதைத் தயார் செய்திருக்கிறது.

இந்த ஆண்டு முதல் என்றில்லை - இந்த மாதம் முதல்

திரட்டப்படும் கவுஜைகளை மடம் மிகுந்த கவனத்தோடு ஆராயும்
எந்தக் கவுஜை படிக்கத் துவங்கியதுமே பதற வைத்து ஓட வைக்கிறதோ எந்தக் கவுஜை வாசிக்கத் துவங்கியதும் வாந்தியெடுக்க வைக்கிறதோ அந்தக் கவுஜைக்காக 'சீத்தலைச் சாத்தனார் விருது' வழங்கப்படுமென்ற மகிழ்ச்சிகரமான செய்தியை இங்கே தெரியப்படுத்துகிறோம்.

இதில் மகிழ்ச்சிக்குரிய இன்னொரு விதயமும் இருக்கிறது.
கவுஞர்களை மட்டும் நாம் கௌரவிப்பதாக இல்லை. இது போன்ற கவுஜைகளை தங்கள் இதழகளில் அனுமதித்து கவுஜை வாழ வழிவகுக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் 'கவுஜைக் காப்பாளர்'விருது வழங்கலாமென்ற எண்ணம் இருக்கிறது. கவுஜையை வாழ வைக்கும் புண்ணியாத்மாக்களை புறக்கணிக்கலாமா?

இதில் பதிவர்களாகிய உங்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது நீங்கள் படித்து நொந்து நூடுல்ஸாகி 'என்ன எழவுடா இது?' என்று டவுசரைக் கிழித்துக் கொண்ட கவுஜைகள் இருந்தால் கவிமடத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். சிறந்த கவுஜையைப் பரிந்துரைத்தமைக்காக உங்களுக்கும் 'எட்ட்ப்பனார் விருது' வழங்கலாமென்றிருக்கிறோம். ஆக்வே எல்லோரும் விருது பெற வேண்டுமென்ற உயரிய எண்ணத்துடன் துவங்கப்பட்டிருக்கும் கவுஜை மடத்தின் விருதுகளை ஆதரியுங்கள். அடுத்த வாரத்தில் இவ்வருடத்திற்கான விருதுகள் பட்டியல் அறிவிக்கப்படும்.

கவுஜையே எம் பணி
கதறுவது உங்கள் பிணி

Tuesday, July 17, 2007

கவி முடம் (எழுத்துப்பிழையல்ல)

கவுஜை மடமாம் கவிமடம்
தற்காலிகமாய் காலி இடம்.

தழும்பாதாமே நிறைகுடம்
அதுபோலல்ல இது கவிழ்ந்த குடம்.
அதுபோல் அல்ல. இது, கவிழ்ந்த குடம்.

அழகிய கவிதைகள் பிறக்குமிடம்
தெரியாமல் போனதென்ன இருக்குமிடம்.

ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம் - கவிஞா
ஈ கலப்பை எடுத்திடு இந்நிமிடம்
தீர்ப்போம் இந்தக் கவிமுடம் - வா
தீர்ப்போம் இந்தக் கவிமுடம்.

கவிமடம் அநேக நாளாய் பூட்டிக்கிடப்பதை அறிந்து மனம் வருந்தி டையட் பெப்சியை அருந்தியவாறே கண்ணீரில் எழுதிய கவுஜை. மடாதிபதிக்கு சமர்ப்பணம்.

Tuesday, February 13, 2007

கவிமடத்தின் 'கறுப்பு' தினம்

ஓ!காதலே!!

எனக்கு
வேண்டாம்
காதலர் தினம்.

எனக்கு வேண்டியது
காதலி - நீ
தினம்!

என்ற வகைக் கவுஜைகளை 'ஹோல்சேலாக' உருவாக்க வழிவகுத்ததாலும்,

என்றோ எப்போதோ கிறுக்கிக் கொண்டிருந்தவர்களை, ஒரு தினம் போட்டு கவுஜைத் தீவிரவாதத்துக்கு அடிகோலியதாலும்,

நல்லபடியாக பேசிக்கொண்டிருந்த எம் இளைஞர் குலத்தை வழிதிருப்பி பொறவிக் கவுஜர்கள் ஆக்க வகை செய்ததாலும்,

கவிதைக்குச் சாவுமணிஅடிக்க வந்த காதலர் தினத்தை கவிமடம் துக்க தினமாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கிறது.

இன்று கவுஜை எழுதிய அத்தனை பேருக்கும் காதலியே மனைவியாக வாழ்த்துகள். (நாங்க மட்டும் என்ன முட்டாளுங்களா? - மனைவி ஆனதும் பாருங்க)

இன்று கவுஜை எழுதாத அத்தனைக் கவுஜர்களுக்கும் கவிமடம் ஆயுட்கால சந்தா இலவசம்.

துக்கத்தைக் கொண்டாட இன்று கவிமடம் கடையடைப்பு செய்கிறது. (இன்று கடையடைப்பு நடந்தாலும் இன்று கவிமடச் சந்தா பிரிவு திறந்தே இருக்கும்)

பி கு: இனிய நண்பர் சாகரனின் வருந்தத்தக்க அகால மரணத்தின் துக்கத்தில் கவிமடமும் பங்கேற்கிறது. துக்கத்தில் கவுஜையாகப் பொங்கிப் போலித்தனக் கவிதைகளைக் கொட்டாமலிருந்த கவிஞர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நண்பர் சாகரனின் அகால மரணத்தால் இந்தக் கறுப்பு தினத்தில் நடத்தப்படுவதாக இருந்த மாபெரும் கவுஜை போட்டி இன்னும் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படிருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் 'வார்ம்-அப்' செய்வது மாதிரி பொறவிக்கவுஞர்கள் இப்போதே கவுஜ எழுதிப் பழகிக் கொள்ளுங்கள்

கவிமடம்.

Tuesday, January 16, 2007

எழுத்து சிக்கன கவுஜை

கவுஜைகளில் சொற்சிக்கனம் மிக அவசியமானது என்று எல்லாருக்கும் தெரியும் - கவுஜை எழுதுபவர்களைத் தவிர.

ஆனால், கவுஜைகளிலேயே சொற்சிக்கனம் போய் இப்போது எழுத்துச் சிக்கனம் வரை கவுஜை அபார வளர்ச்சியில் சிக்கிக் கொண்டு மூச்சு முட்டித் தவிக்கிறது.

அப்படி ஒரு அபார எழுத்து சிக்கன கவுஜை ஒன்றை இன்று பிரித்து மேயலாம்.


நீ
வா
தா
சீ
போ
தூ!

காட்சி 1:

காதலன் காதலியைப் பார்த்து சொல்வது

காட்சி:2

வா என அழைக்கிறான்

காட்சி:3

தா எனக் கேட்கிறான்.
என்ன கேட்டான் என்பதை அவரவர் கற்பனை செய்து கொள்ளுங்கள்

காட்சி:4

சீ! எனக் காதலி சிணுங்குகிறாள் தராமல்

காட்சி:5

சனியனே! இதுக்கா உன்னை தள்ளிக்கிட்டு வந்தேன் என்று மனதுக்குள் நினைத்தவாறே 'போ' என்கிறான் காதலன்

காட்சி:6

இதெல்லாம் ஒரு கவிதையா? என்று கடுப்புடன் வாசகர்கள் செய்வது

கவிமடத்துக் கண்மணிகள்

தமிழன்னைக்கொரு முனைவராஞ்சலி!!

ஓ! எங்கள் தமிழ் அன்னையே!!

உனக்கொரு வணக்கம்
நீ பெற்ற பிள்ளைகளில்
சுட்டிப் பிள்ளை
குட்டிப்பிள்ளை
நல்ல பிள்ளை
கெட்ட பிள்ளை என
பிள்ளையாயும்
தொல்லையாயும்
பல பிறந்தும்
உனக்கான
உன் பிள்ளையாய்
பெற்றெடுத்தாய்
பாலகன் ஒருவனை

யார் யாரோ
எறிந்த கல்லில்
தீர்ப்பை திருத்தி எழுதி
கள்ளிக்காட்டிற்கொரு
இதிகாசம் படைத்து
இதுவரை நானென்று
கேள்விகளால் வேள்வி செய்து
இதனால் சகலமானவர்க்கும்
அறிவிப்புச் செய்து பிறந்தான் அவன்

அவனின் பழைய பனை ஓலைகள்
இதயவாசலில்
ஊர்வலமாய் போனதை
அவன் ஜன்னலின் வழியே
ஒரு மௌனத்தின் சப்தங்களோடு
இதய சிம்மாசனத்தில் இருந்து
பார்த்திருந்தாய் நீ

எல்லா நதியிலும் அவன் ஓடம்
இருந்தது
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களையும் கடந்து
அவர்கள் வருவதற்காக
ஒரு போர்க்களும் இரண்டு பூக்களும்
மட்டுமே இருந்ததால்
இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல
என்றான் அவன்
அவளுக்கு மேலே ஒரு வானம்
என்றாலும்
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
இருந்தாலும்
ஒரு வானம் தாண்ட இரு சிறகுகள்
போதுமா?
அவளுக்கு ஒரு கடிதம்
எழுதினான் அவன்

காவி நிறத்தில் ஒரு காதல் செய்தவன்
நடந்த நாடகங்களை
திருவிழாவில் ஒரு தெருப்பாடகனின்
சோகத்தோடு
திறந்த புத்தகமாய்
அவனும் அவன் கவிதையும்
நந்தவன நாட்க்ளில்
சிகரத்தை நோக்கி
பறந்த சுகத்தை
கல்வெட்டாய்
பதித்து வைத்ததை
காத்திருந்த காற்று
மட்டுமே அறியும்

இதையெல்லாம் நினைத்தால்
மீண்டும் அவன் தொட்டிலுக்கு
திரும்பத் தோன்றிவிடும்
நேற்று போட்ட கோலத்தை
நினைத்து நெகிழ்ந்ததால்
பக்கம் பார்த்து பேசுகிறான் அவன்

வைகறையில் மேகங்கள் வந்ததால்
வெளிச்சம் வெளியே இல்லை
என உணர்ந்து
வில்லோடு வா நிலவே என அழைத்தவன் அவன்

வடுகப்பட்டி முதல் வால்கா வரை
வானம் தொட்டு விடும் தூரம்தான்
என உணர்ந்தவன் அவன்

அவன் பேனா எடுத்ததால்
உருவாச்சு காவியம் - அதுதான்
கருவாச்சி காவியம்

அவனை உலகுக்கு
அடையாளம் காட்டினாய் நீ
உன்னை உலகுக்கு
அடையாளம் காட்டுவதாகச் சொல்கிறான் அவன்
அடையாளம் காட்ட
வேண்டிய அளவுக்கு நீ
அடங்கியா போய் விட்டாய் அன்னையே?!

அவனுக்குச் சோறூட்டினாய் நீ
உனக்குச் சோறு தருவதாகச் சொல்கிறான் அவன்
இலவச ரேசன் அரிசியில்
பொங்காமல் இருக்க
பொங்கல் வைத்து பிரார்த்தனை செய் நீ.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகனை டாக்டர் எனக் கேட்ட தாய்
என்று குறள் சொல்கிறது

உன் மகனுக்குக் கிடைத்த டாக்டர்
பட்டத்தால்
உன் குரல் விம்முகிறது

கவலைப்படாதே அன்னையே!
உனக்குத்தான் எத்தனை
டாக்டர் மகன்கள்?
கொடுத்து வைத்தவள் நீ.

எந்த நுழைவுத்தேர்வும் எழுதாமல்
எந்த நன்கொடைத் தொகையும் வழங்காமல்
உன்மக்கள் டாக்டர்களாகிக்
கொண்டேஇருக்கிறார்க்ள்

நீதான் தொடர்ந்து
உன் மக்களாலேயே
தொடர்ந்து நோய்வாய்ப்பட்டே
கிடக்கிறாய்.

இந்த மகனாவது
டாக்டரான பிறகாவது
உன் நோய் தீர்க்க முன்வரட்டும்

உன் மகனுக்குக்
கிடைத்த பட்டத்தால்
உலகமே மகிழ்கிறது
வேறு வழியேயில்லாமல்
கூடவே நாமும்

உனக்கு
எம்
முனைவராஞ்சலிகள்.


இது ஒரு கவிமடத்துக் காணிக்கை

Monday, January 15, 2007

கவிமடம் Inc.

Mission


உணர்வுபூர்வமாகவே அணுகப்பட்டுவரும் 'கவுஜை'களை தொழில்ரீதியிலான பார்வையோடு அணுகி, எல்லா சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் உடனடியாகக் 'கவுஜை' புனைவதை பரவலாக்குதல்


Vision


கவுஜர் என்று அறியாத கவுஞர்களுக்கும், கவுஞர் என்று அறியாத பாமரர்களுக்கும் கவுஜைகளை எளிமையாக்கி பொறவிக்கவுஞர்களை உருவாக்கி எல்லோரும் இந்நாட்டுக் கவுஞர் என்ற நிலை எய்துவதே எம் குறிக்கோள்.


செயல்பாடுகள்


1. நூறு உயிராவது செத்தால்தான் கவுஜை புனைவோம் என்று இறுமாந்திருக்கும் பிரபலக்கவிஞர்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றி, ஒரே ஒரு ஈ எறும்புக்கு சுண்டுவிரல் சுளுக்கு்க்க என்றாலும் துக்கம் பொங்கி வரும்்வரும் படைப்புகளை உருவாக்குதல், பரவலாக்குதல்.


2. கவுஜைகளில் நெடில் பயன்பாட்டைத் தரப்படுத்தி, ஏ எங்கே போட வேண்டும், ஓ எங்கே போடவேண்டும் என்பதை எளிமைப்படுத்துதல்.



3. பெண்ணை ஒப்பிட இருக்கும் 5 பில்லியன் சமாசாரங்களை (நிலவு, கடல், இயற்கை இன்ன பிற) இன்னும் அதிகப்படுத்தி காதல் கவுஞர்களின் இருப்பை சுவாரஸ்யப்படுத்தல்.



4. கட்சிமாறிய கவுன்சிலர் முதல் புஷ் வரை யாரையும் திட்டி உடனடிக் கவிதை புனையும் ஆற்றலை உருவாக்குதல்.



5. அஞ்சல் நவீனத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு 'ஏலேலோ ஐலேசா'பாடி நகர்த்தி மின்னஞ்சல் நவீனத்துவமாக பரிணாம வளர்ச்சி பெறச்செய்தல்.



6. கீழ்க்காணும் தர அளவுகளில் கவுஜைகளைப் புனைதல்:

அ. புரிதல் அளவு - 1 - 2 - 3 - 4 - 5 (ஒன்று - சுலபமாகப் புரியும், 5 - எழுதினவனுக்கே புரியாது)
ஆ. உணர்ச்சி அளவு 1 - 2 - 3 - 4 - 5 (ஒன்று - நெடில் பிரயோகம் இல்லை, 5 - கவிதை முழுக்க உயிர்நெடில்தான்)
இ. நவீனத்துவம் அளவு 1 - 2 - 3 - 4 - 5 (1 - வாரமலர் வகையறா, 5 விருட்சம் வகையறா)


7. பிரபலக்கவிஞர்களின் கவுஜைகளைப் பிரித்து மேய்ந்து திறனாய்வு செய்தல்.



இவைகளெல்லாம் வெறும் வரைவுத் திட்ட ஆரம்பம்தான்தான்.. இன்னும் இது கூடும்.




இந்நேரம் மட நிர்வாகிகள் யாரென்று கண்டுபிடித்திருப்பீர்கள்.
இருந்தாலும் காலம் கனியும்போது் மூத்த உறுப்பினர்கள் பெயர்கள் தெளிவுபடுத்தப்படும்.

முக்கியச் செய்தி:



புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
ஆனால் நிபந்தனையோடு
தங்கள் கவுஜை புனையும் திறனை மெய்ப்பித்து,
ஆதாரங்களுடன் இந்த மின்னஞ்சலுக்கு
விண்ணப்பித்தால்
பரிசீலனைக்குப் பிறகு
சேர்க்கப்படுவார்கள்

புது உறுப்பினர்கள் தங்கள் பயிற்சிக்காலத்தில் பட்டை தீட்டப்பட்டு, பொறவிக்கவுஜர்களோடு போட்டி போடும் வகையில் உருவாக்கப்படுவார்கள். அதற்கு்கு மடம் உத்தரவாதம்.

தப்பித்தவறி மடத்தில் சேர்ந்து மடத்தனமாகக் கவிதை எழுத ஆரம்பித்தால் மடத்திலிருந்து விலக்கப்படுவதோடு, அவர்களுக்கும் அவர்கள் கவிதைகளுக்கும் மடம் ஒருபோதும் பொறுப்பேற்காது.

சோதனை பதிவு

எங்கும் கவுஜை என்பதே
பேச்சு
கவுஜை என்பதே
எம் உயிர் மூச்சு

உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
கவுஜை எழுதி
கவுஜை எழுதி
கவி படைப்போம் நாட்டிலே

ஏட்டுக்கவியும்
கூட்டுக்கவியும்
சோத்துக் கவியும்
சொதப்பல் கவியும்

சொந்தமாகக் கவுஜை
செய்து
கவி வளர்ப்போம் நாட்டிலே!!

எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்நாட்டு 'கவுஞர்'

கவுஞர்கள் எல்லாரும்
"இன்புற்றிருக்க"
நினைப்பதுவேயல்லாமல்
வேறேதும் அறியோம் பராபரமே!

கவி மடத்துக் கண்மணிகள்