Tuesday, January 16, 2007

தமிழன்னைக்கொரு முனைவராஞ்சலி!!

ஓ! எங்கள் தமிழ் அன்னையே!!

உனக்கொரு வணக்கம்
நீ பெற்ற பிள்ளைகளில்
சுட்டிப் பிள்ளை
குட்டிப்பிள்ளை
நல்ல பிள்ளை
கெட்ட பிள்ளை என
பிள்ளையாயும்
தொல்லையாயும்
பல பிறந்தும்
உனக்கான
உன் பிள்ளையாய்
பெற்றெடுத்தாய்
பாலகன் ஒருவனை

யார் யாரோ
எறிந்த கல்லில்
தீர்ப்பை திருத்தி எழுதி
கள்ளிக்காட்டிற்கொரு
இதிகாசம் படைத்து
இதுவரை நானென்று
கேள்விகளால் வேள்வி செய்து
இதனால் சகலமானவர்க்கும்
அறிவிப்புச் செய்து பிறந்தான் அவன்

அவனின் பழைய பனை ஓலைகள்
இதயவாசலில்
ஊர்வலமாய் போனதை
அவன் ஜன்னலின் வழியே
ஒரு மௌனத்தின் சப்தங்களோடு
இதய சிம்மாசனத்தில் இருந்து
பார்த்திருந்தாய் நீ

எல்லா நதியிலும் அவன் ஓடம்
இருந்தது
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களையும் கடந்து
அவர்கள் வருவதற்காக
ஒரு போர்க்களும் இரண்டு பூக்களும்
மட்டுமே இருந்ததால்
இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல
என்றான் அவன்
அவளுக்கு மேலே ஒரு வானம்
என்றாலும்
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
இருந்தாலும்
ஒரு வானம் தாண்ட இரு சிறகுகள்
போதுமா?
அவளுக்கு ஒரு கடிதம்
எழுதினான் அவன்

காவி நிறத்தில் ஒரு காதல் செய்தவன்
நடந்த நாடகங்களை
திருவிழாவில் ஒரு தெருப்பாடகனின்
சோகத்தோடு
திறந்த புத்தகமாய்
அவனும் அவன் கவிதையும்
நந்தவன நாட்க்ளில்
சிகரத்தை நோக்கி
பறந்த சுகத்தை
கல்வெட்டாய்
பதித்து வைத்ததை
காத்திருந்த காற்று
மட்டுமே அறியும்

இதையெல்லாம் நினைத்தால்
மீண்டும் அவன் தொட்டிலுக்கு
திரும்பத் தோன்றிவிடும்
நேற்று போட்ட கோலத்தை
நினைத்து நெகிழ்ந்ததால்
பக்கம் பார்த்து பேசுகிறான் அவன்

வைகறையில் மேகங்கள் வந்ததால்
வெளிச்சம் வெளியே இல்லை
என உணர்ந்து
வில்லோடு வா நிலவே என அழைத்தவன் அவன்

வடுகப்பட்டி முதல் வால்கா வரை
வானம் தொட்டு விடும் தூரம்தான்
என உணர்ந்தவன் அவன்

அவன் பேனா எடுத்ததால்
உருவாச்சு காவியம் - அதுதான்
கருவாச்சி காவியம்

அவனை உலகுக்கு
அடையாளம் காட்டினாய் நீ
உன்னை உலகுக்கு
அடையாளம் காட்டுவதாகச் சொல்கிறான் அவன்
அடையாளம் காட்ட
வேண்டிய அளவுக்கு நீ
அடங்கியா போய் விட்டாய் அன்னையே?!

அவனுக்குச் சோறூட்டினாய் நீ
உனக்குச் சோறு தருவதாகச் சொல்கிறான் அவன்
இலவச ரேசன் அரிசியில்
பொங்காமல் இருக்க
பொங்கல் வைத்து பிரார்த்தனை செய் நீ.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகனை டாக்டர் எனக் கேட்ட தாய்
என்று குறள் சொல்கிறது

உன் மகனுக்குக் கிடைத்த டாக்டர்
பட்டத்தால்
உன் குரல் விம்முகிறது

கவலைப்படாதே அன்னையே!
உனக்குத்தான் எத்தனை
டாக்டர் மகன்கள்?
கொடுத்து வைத்தவள் நீ.

எந்த நுழைவுத்தேர்வும் எழுதாமல்
எந்த நன்கொடைத் தொகையும் வழங்காமல்
உன்மக்கள் டாக்டர்களாகிக்
கொண்டேஇருக்கிறார்க்ள்

நீதான் தொடர்ந்து
உன் மக்களாலேயே
தொடர்ந்து நோய்வாய்ப்பட்டே
கிடக்கிறாய்.

இந்த மகனாவது
டாக்டரான பிறகாவது
உன் நோய் தீர்க்க முன்வரட்டும்

உன் மகனுக்குக்
கிடைத்த பட்டத்தால்
உலகமே மகிழ்கிறது
வேறு வழியேயில்லாமல்
கூடவே நாமும்

உனக்கு
எம்
முனைவராஞ்சலிகள்.


இது ஒரு கவிமடத்துக் காணிக்கை

No comments: